![](pmdr0.gif)
தண்ணீரைப் போற்றுவோம்
(கவிதைகள்)
க. செயபாலன்
taNNIraip pORRuvOm (poems)
by Kandiah Jeyapalasingham
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our thanks also go to the author of this work, Mr. Kandiah Jeyapalasingham of Ottawa, Canada for providing a soft copy of this work and permissions to include this work as part
of Project Madurai e-book collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
தண்ணீரைப் போற்றுவோம் (கவிதைகள்)
க. செயபாலன்
-
Source (நூல் விவரக் குறிப்பு):
தண்ணீரைப் போற்றுவோம்
(கவிதைகள்)
க. செயபாலன்
மணிமேகலைப் பிரசுரம்
7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017
2016, முதற் பதிப்பு, விலை ரூ. 50.00
உரிமை ஆசிரியருக்கு
அச்சிட்டோர்: ஸ்கிரிப்ட் ஆஃப்செட், சென்னை-600 094
---------
பொருளடக்கம்
1. வாழ்த்துப் பா | 13. உபதேசம் |
2. பண்பாடு பத்து | 14. போற்றிக் கவி |
3. தமிழ் கற்றோம் | 15. பாரதி வாழ்வு |
4. தமிழ் கேட்டேன் | 16. வாத்துப் பெயர்வு |
5. தண்ணீரைப் போற்றுவோம்! | 17. நம்மால் முடியும் |
6. புலம்பெயர் மொழி இருப்பு | 18. அங்காடித் தெரு |
7. முதற் கவிதை | 19. பாகுபாடு |
8. கதிர்மதி | 20. பாம்பும் ஏணியும் |
9. நீரிழிவு | 21. கவர்ந்துபோனாரே |
10. என் வீட்டுப் பூக்கள் | 22. அல்லல் |
11. மரணம் | 23. மறவோமே |
12. மரணம் தண்டனையா |
தண்ணீரைப் போற்றுவோம் (கவிதைகள்)
இலங்கையிற் பிறந்து வளர்ந்து, கனடாவில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வருகிறேன்.
பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகவும், பல்கலைக்கழக முதலாம் ஆண்டு வரை தமிழைப் பயிற்று மொழியாகவும் கொண்டதிற் பெற்றுக்கொண்டது எனது தமிழறிவு. அதன் பின் வாசிப்பின் மூலமும், கண்டும், கேட்டும், அவ்வப்போது ஏதாவது எழுதியும் என் தமிழறிவை மழுங்கடிக்காமற் பார்த்து வந்துள்ளேன்.
பலவித அனுபங்களினூடே பயணித்துவந்த தற்கால ஈழத்தமிழர் போல் அவ்வப்போது இடம்பெறும் நல்ல, தீய சம்பவங்களால் உந்தப்பட்டுப் பிறந்த பல கவிதைகளில் சிலவற்றைத் திரட்டி இப்பொழுது புத்தக வடிவில் உங்கள் முன் வைக்கிறேன்.
எனது நன்றியும் வாழ்த்தும் உங்கள் எல்லோருக்கும் கிடைப்பதாகுக.
அன்புடன்,
க. செயபாலன்
------------
1. வாழ்த்துப்பா
அம்மா அப்பா வணக்கம்
ஆசிரியர்களே வணக்கம்
இறையருள் வேண்டி வணக்கம்
ஈதல் செய்யவே இணக்கம்
உலகம் உய்யவே உழைப்போம்
ஊருடன் சேர்ந்தே வாழ்வோம்
எவர்க்கும் உதவத் தயங்கோம்
ஏலாதவரைக் காப்போம்
ஐயந் திரிபறக் கற்போம்
ஒற்றுமை யொன்றே நினைப்போம்
ஓதல் செய்தலை நிறுத்தோம்
ஒளடதந் தவிர்க்க முயல்வோம்
(அ)ஃதெலாம் வேண்டி வணக்கம்
வணக்கம் வணக்கம்
-----------------
2. பண்பாடு பத்து
எம் முன்னோர் பகுத்து வைத்தார்
பண்பாடு பத்தென்றார் (எம் முன்னோர்)
நட்பை நயமாய்ப் பேணச் சொன்னார்
வாய்மையைக் கடைப்பிடிக்கச் சொன்னார் (எம் முன்னோர்)
அன்பின் பெருமை அறியச் சொன்னார்
மானம் பெரிதென வாழச் சொன்னார் (எம் முன்னோர்)
வீரமே மூச்சாய் வேணு மென்றார்
கலைகளில் மூழ்கிக் களிக்கச் சொன்னார்(எம் முன்னோர்)
அறம் தவறாமல் வாழச் சொன்னார்
பக்தி நெறி நெஞ்சில் பதிக்கச் சொன்னார்(எம் முன்னோர்)
விருந்தோம்பி வாழும் வழி சொன்னார்
ஒழுக்கத்தின் உயர்வு ஓதிச் சொன்னார் (எம் முன்னோர்)
------------
3. தமிழ் கற்றோம்
தந்தை தாய் கைப்பிடித்துக்
கலவர முகத்துடனே
நாலு வயதில் வந்தோம்
தமிழ்ப் பள்ளியினை நாடி
வணக்கம் கூறி வரவேற்றார்
வடிவாக ஆசிரியரும்
வணங்கி வரம் பெற்றது போல்
கற்றோம் தமிழை நாமும்
ஆனா முதல் அகேனம் வரையும்
கானா முதல் னானா வரையும்
காணாத பல எழுத்தும் - வாயிற்
பூராத புது ஒலியும்
பழகினோம் பார்த்தோம்
எழுதியும் வந்தோம்
புலம் பெயர்ந்து வந்த நாம்
புறம்பாகத் தேர்ச்சி பெற்றோம்
புலவர் பலர் வளர்த்து விட்ட
என்றும் புதுத் தமிழ் மொழியில்
முழுநேரக் கல்வியோ
புகுந்த மொழி மூலம்
மூச்சு விடுவதுமே
அம்மொழியில் என்றிருக்க
இரண்டரை மணித்துளியில்
இனிதாய்க் கற்றுணர்ந்தோம்
தாய் மொழியாம் தமிழ் மொழியை
--------------
4. தமிழ் கேட்டேன்
அம்மாவிடம் என் அறிமுகம் கேட்டேன்
அப்பாவிடம் நான் அறிவுரை கேட்டேன்
பள்ளி செல்லும் ஆசையில் கேட்டேன் - தமிழ்ப்
பள்ளியும் செல்ல ஆர்வமாய்க் கேட்டேன்
ஆனா ஆவன்னா முதலில் கேட்டேன்
அழகு தமிழில் பாடல் கேட்டேன்
சுவை மிகு கதைகள் நிறையக் கேட்டேன்
முத்தமிழ் மூலம் கலைகள் கேட்டேன்
ஒளவையின் ஆத்திசூடி கேட்டேன்
வள்ளுவன் தந்த திருக்குறள் கேட்டேன்
பாட்டுக்கொரு கவி பாரதி கேட்டேன்
பாரதிதாசன் பாடலும் கேட்டேன்
தொல்காப்பியத்தில் இலக்கணம் கேட்டேன்
ஐம்பெருங்காப்பி யங்களுங் கேட்டேன்
இலக்கியம் இயற்றும் யாப்புக் கேட்டேன்
யாப்பைக் காத்த சங்கம் கேட்டேன்
கற்றது கையளவாமெனக் கேட்டேன்
பென்னம் பெரிய கைகள் கேட்டேன்
விட்டது உலகளவாமெனக் கேட்டேன்
சின்னஞ் சிறிய உலகம் கேட்டேன்
அம்மா அப்பா வாழ்த்துக் கேட்டேன்
ஆசிரியர்கள் ஆசியும் கேட்டேன்
அன்புடன் இப்போ வணக்கம் கேட்பேன்
வாழ்நாள் முழுக்கத் தமிழைக் கேட்பேன்
-----------
5. தண்ணீரைப் போற்றுவோம்
பருகத் தண்ணீர்
பாய்ச்சத் தண்ணீர்
சோறு கறி எல்லாம்
காய்ச்சத் தண்ணீர்
கழுவத் தண்ணீர்
குளிக்கத் தண்ணீர்
தெளிக்கத் தண்ணீர்
துவைக்கத் தண்ணீர்
பயிர் விளையத் தண்ணீர்
உயிர் வாழத் தண்ணீர்
எத்தனை அதிசயம்
எத்தனை அற்புதம்
பாரீர் பாரீர் தண்ணீர் பாரீர்
தின்னும் தொண்டை
அடைத்தால் அதனை
இளக்க வேண்டும் தண்ணீர்
மேலும் விக்கல்
எடுத்தால் அதனைத்
தடுக்க வேண்டும் தண்ணீர்
பயன்பட மட்டுமா தண்ணீர்
பயப்பட வைக்கவும் தண்ணீர்
மூழ்கினால் இறப்பு
பேரலையாய் அடிப்பு
கொதிநீராய் அவிப்பு
எனக் கொல்லவும்
செய்யும் இவ் வப்பு
ஆக்க அழிக்க
மட்டுமா தண்ணீர்
அழகாய் இரசிக்கவும்
அழகுத் தண்ணீர்
மழையின் அழகு
மனதைக் கவரும்
வெள்ளம் பாய்ந்துள்
மனத்தை வருடும்
நதியாய்ப் பாய்ந்து
அழகாய் நடக்கும்
குளமாய் கடலாய்
மனத்தை நிறைக்கும்
அலையாய் அடித்து
மனத்தை வெளுக்கும்
நீர் வீழ்ச்சியாய்க்
கர்வம் அடக்கும்
வான வில்லாய்
விண்ணை அளக்கும்
வண்ணம் கூடத்
தண்ணீர் தானே
திண்மம் திரவம்
வாயுவென வடிவெடுத்து
எடுக்கும் வடிவிலெல்லாம்
கொடை கொடுக்கும் தண்ணீர்
இறந்தவர் கடன் தீர்க்க
ஒரு முழுக்கு
கோவிலைத் தொடக்கி வைக்கக்
குட முழுக்கு
துடக்குக் கழிக்கவென்று ஒரு முழுக்கு - என
மூடக் கொள்கைக்கும்
இல்லை நீ விலக்கு
தண்ணீர் போல் தாராளம்
யார்க்குண்டு ஏராளம்
ஆதலால் நீவிர்
தண்ணீர் போற்றுதும்
தண்ணீர் போற்றுதும்
--------------
6. புலம்பெயர் மொழி இருப்பு
ஒளி இருப்பு விளங்க அது
பட வேண்டும் பொருள் மீது
பட்ட ஒளி விழ வேண்டும்
பார்க்கும் கண் கள்மீது
பார்த்தவர் மதி சொல்லும்
பார்த்தது எது என்று
முழு மதியால் உணர்வோமே
தெரிய வைத்தது ஒளி என்று
ஒளியைப் போல் மொழி துலங்கப்
பேசிப் படித்து எழுதிக் காட்ட
மக்கள் வேண்டும் ஊடகமாய்
காவிச் செல்லக் காவிகளாய்
புலம் பெயர்ந்து வந்தவர்கள்
புலன் இழந்து வீழவில்லை
வந்த இடம் புதிது என்று
வாய் பொத்தி நிற்கவில்லை
புகுந்த நாட்டு மொழியினிலே
புலமை நிலை நிறுத்திவிடு
அத்தோடு தேர்ச்சி பெறு
தமிழ் மொழியில் விரைவாக
இரண்டு மொழி மூன்று மொழி
இளமையிலே கற்ப தெளிது
மானிடரின் மதித் திறனில்
பல மொழிகள் புகுமிலகில்
மொழியார்வம் மிகுந்து விட்டால்
எமையாரும் மிதித்து விடார்
வெறி பிடித்துப் பிதற்றாமல்
மொழி படித்து வாழ்வோமே
நாம் வழங்கா நமது மொழி
நாளைக்கே மறந்து விடும்
நாள் தோறும் புழங்கினாலோ
நம்மில் நிலை பெற்று விடும்
தமிழில் உரை யாடிடுவோம்
தமிழில் உற வாடிடுவோம்
தமிழ் தடக்குப் பட்டு நின்றால்
தெரிந்து கொள்ள முயன்றிடுவோம்
கணினித் தமிழ் யுகத்தினிலே
நமக் கெல்லாம் வலையில் விழும்
தேடிப் பார்க்கக் கூகிள் உண்டு
பகிர்ந்து பேச முகநூல் உண்டு
இத்தனை வாய்ப்பிருந்தும்
வரவில்லை தமிழென்றால்
குற்றமது யார் மேலே
குற்றவாளி யார் மோனே
வீண் புலம்பல் தனை விடுத்து
வீறாப்பாய்த் துடித் தெழுந்து
பேசிடுவோம் படித்திடுவோம்
எழுதிடுவோம் நம் தமிழை
நாம் வளர்க்கத் தமிழ் ஒன்றும்
மரமும் அல்ல மகவும் அல்ல
வளர்ந்து நிற்கும் தமிழை நாம்
தினம் புழங்க அது நிலைக்கும்
தமிழ் வாழும் தமிழ் வாழும்
கோடி நூல்கள் கண்ட மொழி
எம்மில் தமிழ் தினம் இணைக்க
தலை நிமிர்ந்து தமிழ் வாழும்
-------------
7. முதற் கவிதை
வருவேன் ஐந்து மணிக்கு
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோரம் ஈரம் கசிய
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் சொல்லுங்
கிளிப் பிள்ளை
சொன்னதைச் செய்யாது
ஆண் பிள்ளை
வந்தினிச் சொல்லும்
பல பொய்யை
வாரா திருந்தாலோ
பெருங் கவலை
-----------
8. கதிர்மதி
முகில் மூடி மறைத்திருக்க
முனைந்து தலை நீட்டிடும்
காலை நேரக் கதிரோனே
மாலைமதி போல் நீ
குளிர் முகமும் காட்டுவாயோ
----------
9. நீரிழிவு
அள்ளினாள் மனைவி
ஆசையாய் சீனியை
கொட்டவே எண்ணினாள்
கொண்டவன் கோப்பியில்
கொட்டுமுன் நிறுத்தினாள்
கொஞ்சமாய்ப் போடவே
நப்பியா இல்லையே
அவனுக்கு நீரிழிவு
--------------
10. என் வீட்டுப் பூக்கள்
அழகுக்கு இன்னொரு பெயர் பூவா?
மன அமைதிக்கு அது மருந்தா?
நிறங்களின் வித்தை பூவா?
மனங்களின் விம்பம் பூவா?
வண்டுக்கு மதுச்சாலை பூவா?
பெண்டுக்குப் பூச்சூட்டப் பூவா?
இயற்கையின் ஓவியம் பூவா?
இயற்கையின் காவியம் பூவா?
அழகே பூவா? பூவே அழகா?
----------
11. மரணம்
மறையாதது மரணம்
நிலையானது மரணம்
மரிக்காதது மரணம்
மவுன நியதியே மரணம்
தோன்றிய யாவும்
தொடுமொரு நாளில்
நிலையான மரணத்தைச்
சரியான தருணத்தில்
பிறக்கும் போது
கூடவே பிறக்கும்
பிறழாக் கணக்கு
மரண வழக்கு
நுண்ணிய அங்கி முதல்
நூறுகோடி அண்டம் வரை
நுழைய வேண்டிய வாசலது
நுட்ப அதிசயம் சாதலது
மரணத்தின் வரவு
மர்மத்தில் மர்மம்
எப்ப வரும்
எப்படி வரும்
என்றே தெரியாத
தர்மத்தில் தர்மம்
ஆண்டவன் படைப்பான்
அவனே அழிப்பான்
அழிப்புக்குத் துணையாம்
மரணமெனும் மறையாம்
மரணத்தை வென்றோருமில்லை
மரணித்து மீண்டோருமில்லை - இம்
மர்மத்தை விளக்கவொரு
மார்க்கமும் இங்கில்லை
--------------
12. மரணம் தண்டனையா?
அங்கே நடக்குதொரு போட்டி
தலைப்பைப் பாரதொரு ஈட்டி
மரணம் பற்றி நீயெழுது
தோற்றால் வராது தீது
மரண தண்டனையுந் தராது
மகனே நிறுத்து
மரண தண்டனையா
மீண்டும் சொல்லையா
மரணம் தண்டனையா?
மண்ணுலகில் மாந்தர்தம்
மண்ணாளுஞ் சட்டங்களில்
கண்ணாம்பூச்சி காட்டுகிறார்
குற்றம் புரிந்தோர்க்கு அதியுச்சத் தண்டனையாம்
மரணம் தண்டனையாம்
மரணம் தண்டனையா?
யாருக்குத் தண்டனை?
தவறு செய்தோர்க்கா?
அவனைச் சார்ந்தோர்க்கா?
அளிக்குஞ் சான்றோர்க்கா?
சாகடிக்குஞ் சேவகர்க்கா?
மரணம் தண்டனையா?
மனிதம் தப்பிழைக்கிறதா?
-------------
13. உபதேசம்
சொல்வது இலகு இலகல்ல செய்வது
செய்யாதே உபதேசம் செய்
ஊருக்கு உபதேசித்து
உள்வீட்டைப் பூட்டிவைக்கும்
உப்பற்ற உபதேசிகள்
பலர் வாழும் பூமியிது
மற்றவரை ஏவிடுவார்
கற்றவர் போல் காட்டிடுவார்
தமக்கென்று வரும்போது
கமுக்கமாகத் தப்பிடுவார்
-----------
14. போற்றிக் கவி
என்னைப் போற்றிக்
கவி பாடக்
கேட்டார் நண்பர்
என்னிடமே
என்னைப் பற்றி
எழுதக் கூடும்
போற்றி எழுத
எப்படி முடியும்
உமது திறன்கள்
உமக்குத் தெரியும்
கவிதை எழுத்தும்
உம்மால் முடியும்
எழுதித் தாரும்
விரைவாய் நீரும்
என்னில் எனக்குத்
தெரிவ தெல்லாம்
குற்றங் குறைகள்
மட்டுந் தான்
அவற்றை எழுத்தில்
வடித்தாலோ
அவமா னந்தான்
வரவாகும்
போற்றப் படவே
நானொன்றும்
போதனை சொன்ன
புத்தனு மில்லை
போதியில் ஞானம்
கிட்டவுமில்லை
இதெல்லாம்
வீண் வேலை
விரைந்து நீரும்
சென்றிடுவீர்
----------
15. பாரதி வாழ்வு
இற்றைக்கு நூற்றுமுப்பது
ஆண்டுகள் முன்பு
எட்டயபுரத்தில் பிறந்திருந்தான்
ஏறு போலொருவன்
இயற் பெயராய் அவனுக்கிட்டார்
சுப்பிரமணியன்
தமிழ்ப் புலமை கண்டு அரசனிட்டான்
பாரதியென்று
இள வயதிற் புகழடைந்த
பாரதி கண்டு
மனம் புழுங்கி மிகவே
எரிந்திருந்தான்
காந்தி மதிநாதன்
மட்டந் தட்டப் போட்டிக்குக்
கூவியழைத்தான்
ஈற் றடி கொடுத்து
வெண்பாவொன்று
பாடச் சொன்னான்
பாரதியைப் பாடச் சொன்னான்.
ஈற்றடியாய்க் காந்திமதி
நாதன் கொடுத்தான்
பாரதி சின்னப் பயலென்று
முடிக்கச் சொன்னான் வெண்பாவை
முடிக்கச் சொன்னான்
காரது எனப் பாரதியும்
தொடங்கிப் பாடியே
போட்டி வைத்த காந்திமதி
நாதனையே பார்
அதி சின்னப் பயலென்று
மடக்கி வைத்தான் - அன்று
மடக்கி வைத்தான்
பொது நிகழ்வில் பங்கேற்றார்
பாரதி ஒருநாள்
அங்கு வந்த மாதொருத்தி
கேள்வி தொடுத்தாள்
நிகழ்ச்சிக்குன் மனைவியிங்கு
ஏன் வரவில்லை - உன்
வலது கையை விட்டு விட்டு
நீ வரலாமா?
கேள்வியினால்
ஞானம் பெற்ற அன்றிலிருந்தே
பெண் விடுதலையைத் தீவிரமாய்
உரக்கவே சொன்னான்
சமத்துவமே மகத்துவமெனப்
போற்றி வாழ்ந்தான்
பின்பற்றி வாழ்ந்தான்
ஏற்றத் தாழ்வு போற்றுவோரைச்
சாடிப் பாடினான் - அதை
நீக்கப் பாடினான்
வெள்ளை நிறத்தொரு பூனை
பறவை மிருகம் மரங்கள் நிறங்கள்
அழகை வியந்தான் - அவை
பேணிக் காக்க வேண்டி நின்று
பாடியே வைத்தான்
சின்னஞ்சிறு குருவி போலே
தன் திறமை தன் நிலைமை
நன்குணர்த்திப் பாரதி
நயமாகப் பாடி வைத்தான்
நல்லதோர் வீணை
பன்மொழியில் அவனுக்கிருந்த
புலமையினாலே - அவை
அனைத்திலுமே சிறந்ததெங்கள்
தமிழ் மொழியென்று
பாரறியப் புகட்டி வைத்தான்
யாமறிந்த எனத்தொடங்கும்
சாவறியாப் பாட்டினாலே
பாரதியின் பாடல்களைச்
சமகாலத்தில்
பலவிடத்தில் பாடிவந்தார்
பாடகர் ஒருவர்
அறிந்திராத பாரதியின்
பழக்கம் கிடைத்ததும் - தன் பெயரைக் கூட
மாற்றி விட்டார் சுப்புரத்தினம் - கனக
சுப்புரத்தினம்
தாசன் என்றே தனை அழைத்த
அந்த இரத்தினம்
பாரதிதாசன் என்று புகழ் பூத்த
புரட்சிக் கவிஞன்
ஆதி அந்தம் இல்லாத
தமிழ் மொழி தன்னை
மறைந்து போகக் கூடுமென்று
சொன்ன மூடரை
பேதை என்று அறைந்து
வடித்த கவிதை தன்னை
பொருள் விளங்கா
மக்கள் சிலர்
பொய்ப் பரப்புச்
செய்வதனை விழிப்வோடு
விளக்கிடுவீர்
முப்பத்தெட்டாம் வயதினிலே
விபத்து நடந்ததே - ஒரு
விபத்து நடந்ததே
யானை ஒன்று பாரதியை
தாக்கி வீழ்த்தியே - கொஞ்சம்
காயப்படுத்தவே
அதிலிருந்து தேறி வந்தார்
ஆர்வமாகப் பணிகள் செய்தார்
காலனையே காலால் உதைக்கும்
துணிவு மிக்கவர் - அவர்
துணிவு மிக்கவர்
அகிலம் போற்றும் நல்ல கவி
தமிழ் மொழிக்குப் புதிய ஒளி
விடிவு வேட்கை கொண்ட அந்த
வீரக் கவி சாய்ந்ததுவே
முப்பதோடு ஒன்பதிலே
----------------
16. வாத்துப் பெயர்வு
வடக்காயும் தெற்காயும்
வரிசைகளால் கூம்பமைத்து
ஆண்டிற்கு இரண்டு தரம்
இடம்பெயரும் வாத்துகளே
தொலைநோக்குக் காலநிலைக்
கருவிகள்தாம் நீவீரோ
எதிர்காலம் கணித்துவிடும்
சாத்திரிமார் உம் உறவோ
முக்காலம் உணர்ந்திருந்த
முனிவர்களும் உம் உறவோ
எப்போதும் புலம் பெயரும்
அகதிகளும் உம் போலோ
எப்படித்தான் நீரறிவிர்
வரப்போகும் மாறுதலை
பறப்பதிலும் ஓர் அழகு
அதில் இருக்கும் நேர்த்தி
வியூகமாய்ப் பறப்பதிலும்
புதைந்திருக்கும் அறிவு
உம்மறிவு எமக்கிருந்தால்
பல அழிவு தவிர்த்திருப்போம்
அவரவர்க்கு அதுவதுவே
பகர்வது மா உண்மையே
-------------
17. நம்மால் முடியும்
வரலாறு படைத்தது அமெரிக்கா
அந்நாட்டை ஆளவந்தார் பராக் ஒபாமா
பலநூறு சாதனைகள் படைத்ததில் இதுவொன்றும்
பத்தோடு பதினொன்றே அல்ல அல்ல
புரையோடிப் போயிருந்த நிறவெறிப்
புண் கூட மெல்லென ஆறிட
மனித நேயம் மிக்கவர்கள் வாழும்
அமெரிக்கா நாமேயென்று
கொட்டி முழங்குது சங்கு
ஓங்கி ஒலிக்குது முரசு
ஆம் நம்மால் முடியும் - ஆம்
அமெரிக்காவில் இதுவும் முடியும்
நம் மக்கள் மத்தியில்
மாறுமா நம் சிந்தை
தேறுமா நம் நாடு
இனபேதம் களைந்து
நம்மாலும் முடியும்
மனித நேயம் புரிந்து விட்டால்
புரியுமா மனித நேயம்?
முடியுமா நம்மாலும்?
------------
18. அங்காடித் தெரு
திரைப்பட ஆய்வு செய்யத்
திராணி எனக்கில்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் துன்ப அலை
பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை
நல்லதாய் ஒளிர்கிறது
வல்லதாய் மிளிர்கிறது
வாய் கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக் கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால் பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூழியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்கழியும்
அப்பாவிச் சனம்
காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ
உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை
மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்து விடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கி விட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
மீதிப் பேரைத் திருத்திடுவர்
------------
19. பாகுபாடு
பிறப்போடு தொடங்குதிந்தப் பாகுபாடு
பிறந்தது பெண்ணா ஆணா என்று பாரு - பிள்ளை
வளர்ப்போடு தொடருதிந்தப் பாகுபாடு
கடைக் குட்டிக்கு எப்பவுமே செல்லச் சீரு - பள்ளிப்
படிப்போடும் படருதிந்தப் பாகுபாடு
செல்வாக்கால் கிடைக்குது ஏத்தம் பாரு - இளமைத்
துடிப்போடும் இணைந்திடுமே பாகுபாடு
காதலின் மறு பக்கம் சாதி பாரு - நல்ல
நட்போடும் பகையோடும் பாகுபாடு
சண்டையுஞ் சபையுங் கூடப் பார்க்குஞ் சாதி
வேலைக்குப் போனாலும் பாகுபாடு
பலவடிவில் பார்க்கலாம் வந்து பாரு
இந்த ஊரோ அந்தக் குறிச்சியோ
இன்னாற்றை சொந்தமோ
மறைமுகமாச் சாதி பார்ப்பு
வடக்கோ கிழக்கோ கொஞ்சம் மேலேறித்
தமிழோ சிங்களமோ சைவமோ வேதமோ
பாகுபாட்டு வேதமோ
இதையெல்லாந் தாண்டி வெளிநாடு சென்றாலும்
விதவிதமாத் துரத்துது இந்தப் பாகுபாடு
வந்தவைக்குள் பாகுபாடு
அகதியாக வந்ததோ
அதிதியாக வந்ததோ
முறைப்போடு திரும்பினால்
கறுப்போ வெள்ளையோ
வந்த நாட்டார் மத்தியில்
நாம் கறுப்போ வெள்ளையோ
ஊரிலை பார்த்தோமே
சிவலையோ கறுவலோ
திருப்பி முகத்தி லறையும்
வெள்ளையோ இல்லையோ
பிறப்போடு தொடங்கி
நேற்று வரை தொடர்ந்தோமே
ஈனப் பாகுபாடு
பார்த்தது நாமேயென்ற
கண நேர உறைப்பு
இருந்தாலும் விடுவதில்லை
பார்த்து வந்த பாகுபாடு
மனிதா நீ விட்டுவிடு பாகுபாடு
வெட்கக்கேடு துக்கக்கோடு பாகுபாடு
வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருங் கேடு
உடைத்து நொறுக்கி விடு பாகுபாடு
பெற்று விடும் பேரெழுச்சி உன் நாடு
------------
20. பாம்பும் ஏணியும்
வசதியாக வாழ்வதற்கும்
மேலே ஏற்றி வைப்பதற்கும்
எம்பி எம்பித் தூக்குதற்கும்
ஏணியாக எழுந்து நிற்கும்
குட்டிக் குட்டிக்
குனிய வைக்கும்
முன்னேற முனைப்போரை
முளையிலேயே
கிள்ளிடவும் விசமூச்சுப் பாம்பாக
பலமுகங்கள் கொண்டதுவே
சாதகங்கள் பலருக்கும்
பாதகங்கள் பலருக்கும்
வாரிக் கொடுக்குமிது
வலி மிக்க சாதியிது
பள்ளியிலும் வேலையிலும்
மற்றும்பல இடங்களிலும்
பலபேரைத் தூக்கிவிடும்
பலபேரைத் தாழ்த்திவிடும்
படித்திருந்தும் அறிவின்றிப்
பின்பற்றுங் கற்றோரும்
படிப்பறிவே இல்லாத
பாமர மக்களும்
உரம்போட்டுச் செழிப்பிக்கும்
இம்மக்கள் தூ நிலையோர்
உலகத்தர முன்னேற்றம் ஒருபோதுங் காணாரே
----------
21. கவர்ந்து போனாரே
காசு பணம் தேடிச் சென்றோம்
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்
பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்குஞ் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டிப் பிரித்தே நுழைந்தார்
காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே - அட
நாடே பறி போனதண்ணே
ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே
மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடைபட்டார்
குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே
வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்
----------------
22. அல்லல்
அடக்கு முறையினர் ஆட்சியும்
ஆக்கிரமிப்புச் சூழ்ச்சியும்
இனவழிப்புப் போர்வெறியும்
ஈனக் கொலைகாரரும்
உன்மத்தக் கயவரும்
ஊளயிடும் நரிகளும்
எக்காளப் படைகளும்
ஏவல்செய் நாய்களும்
ஐந்தாம்படைப் பேய்களும்
ஒற்றுமை மறுக்கவும்
ஓர்மமாய்க் கொல்லவும்
ஒளவை சொன்னதல்ல
(இ)ஃதிங்கு தினந்தினமே
வலியோரே ஆள்வதுவும்
எளியோரை அழிப்பதுவும்
புரையோடிய புண்ணாக
புதைந்திருக்கு மனிதத்தில்
பாகுபாடு பார்த்து நிற்கும்
பாவிமனிதன் பாசறையில்
செப்பட்டை அடியுடனும்
செங்குருதி வெறியுடனும்
உச்சக்கட்டச் செயல்வடிவம்
அப்பட்ட அநாகரிகம்
இனவழிப்பு இனவழிப்பு
சிவப்பு இந்தியர்
சிதைந்து போனதும்
கறுப்பு அடிமைகள்
கண்ணீரில் வாழ்ந்ததும்
கனநூறு வருடக்
கல்லினும் திண்ணிய
கனவான் மார்களின்
கைங்கரியம் அன்றோ
ஏனென்று கேட்க
ஆருமே இல்லாது
கெட்டழிந்து போனதன்றோ
கெட்டழிந்து போனதன்றோ
அன்று தொட்டு
இன்று வரை
தொன்று தொட்ட
தந்திரமாய்த்
தொடர்ந்துவரும் அழிவரக்கன்
கையிலின்று அகப்பட்டுச்
சின்னா பின்னமாகச்
சிதறி ஓடுது சன்னமும் குண்டும்
சரமாரியாய் வர
அதிற் சிக்கிச்சாகுது
ஈழத் தமிழினம்
வாழத் தவிக்குது
வாழ்ந்த தமிழினம்
வெட்டை வெளியில்
அட்டை போட்டு
அடக்கி அழிக்கிறார்கள்
அழிந்து போகுது
அழியாத் தமிழினம்
ஏனென்று கேள்விகேட்க
ஏராளம் பேருண்டு
கேட்டுக் கொள்வதற்கு
ஒன்றேனுங் காதுண்டோ
இன்று எளியோன்
நாளை வலியோன்
என்று நிலைமாறிவிடும்
எம்துயரும் மாறிவிடும்
மாறிவிடும் அந்நேரம்
நாம் செய்யோம் இனவழிப்பு
செய்திடுவோம் புதியபூமி
மானிடத்தை உயர்த்திப்பாடி
--------------
23. மறவோமே
நிற்க நடக்க
நிம்மதியாய்ப் படுத்துறங்கப்
பாந்தமாய் வாழ்ந்த நம்
பத்திரப் பூமி அது பாட்டன்
வழிச் சொத்தெனக்
கொண்டாடும் வீடது
மனிதனாய் வாழ்ந்து
நிம்மதியாய் மூச்சுவிட்டு
நினைத்ததை வெளியாக
உரிமையோடு உரைத்திட்டுத்
திரிந்த நம் தேசம்
சிக்கித் தவித்தது
பலவந்தப் படுத்தும்
பல பேரின் கைகளிலே
அத்தனை ஆக்கிரமிப்பும்
அப்பப்ப முறியடித்துக்
காத்திரமாய் வாழ்ந்து வந்தோம்
எம் தாயின் மடியிலே நாம்
மீண்டுமொரு அத்துமீறல்
வந்ததேயிந் நாளினிலே
அக்கிரமம் நிறைசூழும்
கடுந்துயர்க் காலமிதில்
சொந்த நாட்டு மக்களையே
சொத்தையென்று பிரித்தெடுத்து
தாண்டவம் ஆடிடவே
துணிந்திட்டார் தீயோரே
சிலருக்கு நாம் பேசும்
மொழி முதலிற் பிடிக்கவில்லை
உதவிக்கு நாம் அழைக்கும்
கடவுளையும் பிடிக்கவில்லை
சமமாக வாழ வைக்க
மனதில் இடம் இருக்கவில்லை
மனித உரிமைகளை
மதித்து அவர் நடக்கவில்லை
தமிழன் தன் திறமையினாற்
தலையெடுத்தாற் பிடிக்கவில்லை
தரணிபுகழ் தமிழர்தம்
பண்பாடும் பிடிக்கவில்லை
தமிழனென்றோர் அடையாளம்
இருப்பதே பிடிக்கவில்லை
பூர்வீகக் குடிகளது
பூர்வீகம் பிடிக்கவில்லை
பூர்வீகம் பொய்யென்று
பொய்யுரைக்கக் கசக்கவில்லை
மக்கள் வாழ்விடங்கள்
எல்லாம் கடகடவெனத் தகர்ந்தனவே
வீழ்ந்துபட்ட மாந்தர்க்கு
மருந்துகூட வரவில்லையே
மந்தைகளாய் மக்களெல்லாம்
முள்ளிவாய்க்கால் வந்துவிட்டார்
பட்டிக்குள் ஆடுகளாய்
முட்டுக்குள் அடைபட்டார்
மாண்டவர் மாண்டுவிழ
மீதிருந்தோர் துவண்டுவிழ
பேரழிவு பேரழிவு
மிகப்பெரும் பேரழிவு
முள்ளிவாய்க்காற் கொடுந்துயரம்
முட்டிமோதிக் கலங்க வைக்க
கடுந்துயரக் கொலைகள் எம்மைக்
கனவிற்கூடக் கதற வைக்க
ஆண்டாண்டு போனாலும்
அத் துன்பம் மறவோமே
-----------------
This file was last updated on 10 March 2019.
Feel free to send the corrections to the .